ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

வெள்ளத்திற்கு பிந்தைய  60,543 டன் குப்பைகள் அழிப்பு- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் தகவல்

ஷா ஆலம், மார்ச் 17- சிலாங்கூரில்  வெள்ளத்திற்கு பின் குவிந்த 60,543 டன் குப்பைகள் மாநிலத்திலுள்ள ஆறு குப்பைகள் அழிப்பு மையங்களில் மண்ணில் புதைக்கும் முறையைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டன.

அந்த திடக்கழிவுகள் கலங்களில் அடைக்கப்பட்டு நன்கு அழுத்தப்பட்ட நிலையில் மண்ணில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டதாக  ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த குப்பைகளை பாதுகாப்பான முறையில் அழிக்கும் பணியை வோர்ல்ட் வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தின் போது குவிந்த குப்பைகளை அழிப்பதற்கு முன்னர் அவை தரம் பிரிக்கப்பட்டு இரசாயன கழிவுகள் சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டன என்றார் அவர்.

குப்பைகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுவதை உறுதி செய்ய இந்த முறை பயன்படுத்தப்பட்டதாக மாநில சட்டமன்றத்தில் இன்று லெம்பா ஜெயா உறுப்பினர் ஹனிசா தல்ஹா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆக்ககரமான முறையில் குப்பை அழிப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

வெள்ளத்திற்கு பின் குவிந்த குப்பைகளின் அளவு நாம் எதிர்பாராத ஒன்றாகும். ஆகவே, இதனைப் படிப்பினையாகக் கொண்டு சிலாங்கூரில் குப்பை அழிப்பு மையங்களின் பற்றாக்குறைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றார் அவர்.


Pengarang :