ECONOMYNATIONALSELANGOR

அரசாங்க நிலங்களில் குடியிருப்போருக்கு நில உரிமை- பணிகளை விரைவுபடுத்த மந்திரி புசார் உத்தரவு

ஷா ஆலம், மார்ச் 18- நில உரிமை வழங்கும் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அரசாங்க நிலங்களில் குடியிருப்போரை அடையாளம் காணும்படி நில மற்றும் கனிமவளத் துறையை மாநில அரசு பணித்துள்ளது.

நில உரிமைக்கு விண்ணப்பம் செய்வதற்காக பொது மக்கள் நில அலுவலகம் வரும் வரை காத்திருப்பதைக் காட்டிலும் நில அலுவலகமே முன்வந்து அத்தகைய இடங்களை அடையாளம் காண்பது ஆக்ககரமான நடவடிக்கையாக அமையும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக மேலும் வெளிப்படையான போக்கை கடைபிடிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் நம்மைத் தேடி வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்று நில மற்றும் கனிவள இலாகாவை நாம் கேட்டுக் கொள்கிறோம். நாம் முன்வந்து வாய்ப்பினை வழங்க வேண்டும் அல்லது அது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதன் வழி வெளிப்படையான நிர்வாக முறையை உறுதி செய்ய இயலும் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று தாமான் டெம்ப்ளர் உறுப்பினர் முகமது சானி ஹம்சான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இன்னும் நிலமின்றி இருக்கும் சிலாங்கூர் வாசிகளுக்கு நில உரிமை வழங்குவதற்கான சாத்தியம் குறித்து சானி ஹம்சான்  கேள்வியெழுப்பியிருந்தார்.

புறம்போக்கு நிலங்கள், நகர்ப்புற குடியேற்றப் பகுதிகள் மற்றும் நில உரிமை உறுதி செய்யப்படாத இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில்  நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானங்களை சட்டப்பூர்வமாக்கி நில உரிமை வழங்கும் பணியை கடந்த 2008 முதல் 2019 வரை மாநில அரசு மேற்கொண்டு வந்ததாக அமிருடின் கூறினார்.

அந்த நிலத்திற்கான பிரீமியத் தொகையாக அல்லது முன்பணமாக 1,000 வெள்ளியை நில உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். அந்த நிலத்தை விற்கும் போது அல்லது அடமானம் வைக்கும் போத அந்நிலத்திற்கான உண்மையான மதிப்புத் தொகையை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்றார் அவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் அந்த நில உரிமையை மாநில அரசு நீடித்ததோடு பிரீமியத் தொகையை 1,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தியது என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வாரிசுகளாக நியமிக்கப்பட்ட காரணத்தால் பிரீமியத் தொகை உயர்த்தப்பட்டது என அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :