ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மைசெஜாத்ரா செயலியில் ஊக்கத் தடுப்பூக்கு முன்பதிவு செய்யும் வசதி-மார்ச் 21 முதல் அமல்

கோலாலம்பூர், மார்ச் 19- வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் உள்ள மக்கள் மைசெஜாத்ரா செயலியில் உள்ள முன்பதிவு மேலாண்மை முறையைப் பயன்படுத்தி கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்பதிவு செய்ய முடியும்.

மைசெஜாத்ரா செயலி வழி முன்பதிவு செய்யும் நடப்பு முறைக்கு கூடுதலாக இந்த முன்பதிவு வசதியை அரசாங்கம் அந்த செயலியில் இணைத்துள்ளதாக புரேடெக்ஹெல்த் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் அனாஸ் ஆலாம் பைசால் கூறினார்.

வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஊக்கத் தடுப்பூசி பெறாதவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றதற்காக வழங்கப்பட்ட முழு தடுப்பூசி அந்தஸ்து மீட்டுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மலேசியர்கள் மத்தியில் ஊக்கத் தடுப்பூசி பெறுவதை ஊக்குவிப்பது மற்றும் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான அந்தஸ்தை அவர்கள் நிலை நிறுத்திக் கொள்வதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும் பொது மக்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நடப்பு தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக இத்திட்டத்தை அமல்படுத்துகிறோம்.

வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி நாடு எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு சீரான முறையில் மாறுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.


Pengarang :