ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எல்லைத் திறப்பு: புதுப்பிக்கும் பணிக்கு 970,000 கடப்பிதழ்களை குடிநுழைவுத் துறை தயார் படுத்தியுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 22- வரும் ஏப்ரல் முதல் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதை முன்னிட்டு புதுப்பிக்கும் பணிக்காக 970,000 அனைத்துலக கடப்பிதழ்களை மலேசிய குடிநுழைவுத் துறை தயார் செய்துள்ளது.

வெளிநாடு செல்ல விரும்பும் மலேசியர்கள் வரும் ஜூலை மாதம் வரை தங்கள் அனைத்துலக கடப்பிதழ்களை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள இந்த கடப்பிதழ் புத்தகங்கள் போதுமானவையாக இருக்கும் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஷைமி டாவுட் கூறினார்.

தற்போது நமது கைவசம் 970,000 கடப்பிதழ் புத்தகங்கள் உள்ளன. இவை வரும் ஜூலை மாதம் வரை பயன்படுத்துவதற்கு போதுமானவையாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னரே அந்த கடப்பிதழ் புத்தகங்களின் கையிருப்பை அதிகரிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு பதிவான கடப்பிதழ் புதுப்பிப்பு தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒவ்வோராண்டும் கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்வோர் மற்றும் புதுப்பிப்போர் எண்ணிக்கை 23 லட்சம் முதல் 25 லட்சம் பேர் வரை உள்ளதாக சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020 மார்ச் மாதம் நாட்டின் எல்லைகளை அரசாங்கம் மூடியது. நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறும்  நிலையில் வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி அந்நிய சுற்றுப்பயணிகள் மலேசியா வர அனுமதிக்கப்படுகின்றனர்.


Pengarang :