ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

மகளிர் கூடுதல் வருமானம் பெறுவதை ஊக்குவிக்க பயிற்சித் திட்டங்கள்- பெக்கவானிஸ் ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 24– மகளிர் தொழில்முனைவோருக்கு பிரத்தியேகப் பயிற்சித் திட்டங்களை பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமுக நல அமைப்பு மேற்கொள்ளவுள்ளது.

பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் மகளிர் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

இந்த பயிற்சிகள் தொடர்பான முன்னெடுப்புகள் யாவும் இன்னும் திட்டமிடல் கட்டத்தில் உள்ளன. சட்டமன்ற நிலையில் மகளிர் தொழில் முனைவோரை நாங்கள் கண்டறிவோம். சந்தைப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெறும் வரை அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவோம் என்றார் அவர்.

தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் ஆர்வமாக உள்ள தொழில்முனைவோரை அடையாளம் காண்பதில் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) மற்றும் சிலாங்கூர் பிளார்ட்பார்ம் (பிளாட்ஸ்) உதவியை நாடவுள்ளோம். இந்த திட்டத்தில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு சிறந்த பெக்காவானிஸ் தொழில்முனைவோர் விருது வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மருந்துகளை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்கும் நோயாளிகளின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக ஜியாரா மெடிக் திட்டத்தை தாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக மஸ்டியானா கூறினார்.


Pengarang :