ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் கடந்தாண்டு 4,307 பேர் காச நோயினால் பாதிப்பு

ஷா ஆலம், மார்ச் 24– சிலாங்கூரில் கடந்தாண்டு 4,307 காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகப் பொதுச் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு காச நோய் சிகிச்சை உதவித் தொகை திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டும் தொடரும் என்று அவர் சொன்னார். இந்த உதவித் தொகை திட்டத்தின் வழி சுமார் 1,000 காச நோயாளிகள் பயன்பெறுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பொதுச் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழுவின் கீழ் அமலாக்கம் கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ்க் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்கான உதவித் தொகையாக 800 வெள்ளி வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இந்தக் காச நோய் சிகிச்சை உதவித் திட்டத்தின் வழி கடந்தாண்டில் 781 பேர் பயனடைந்தனர். இந்நோக்கத்திற்காக மொத்தம் 624,800 வெள்ளி செலவிடப்பட்டது என்றார் அவர்.

காச நோயாளிகள் நோய்க்கான சிகிச்சையைப் பெறுவதை ஊக்குவிப்பதற்கும் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று வருவதற்கு உண்டாகும் செலவினை ஈடுகட்டுவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது என அனைத்துலகக் காச நோய் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.

கடந்தாண்டில், காச நோய் காரணமாக 597 பேர் மரணமடைந்த வேளையில் 598 பேர் சிகிச்சையை நிறுத்திக் கொண்டனர் என்று அவர் சொன்னார்.

காச நோய் சிகிச்சை உதவித் தொகை திட்டம் தொடர்பில் மேல் விபரங்களை அறிய விரும்புவோர் https://www.selangorprihatin.com/insentifrawatantibi. எனும் அகப்பக்கத்தை நாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :