ANTARABANGSAECONOMYWANITA & KEBAJIKAN

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து வாழும் தாய்மார்கள் கிளப்- டாக்டர் சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், மார்ச் 25– மாநிலத்திலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து வாழும் தாய்மார்கள் கிளப்பை  அமைக்க மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு திட்டமிட்டுள்ளது.

அத்தரப்பினர் தொடர்ந்து தனித்து விடப்படாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மாநிலத்தில் தனித்து வாழும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிந்துரையை நாங்கள் முன்வைத்துள்ளோம். கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்குப் பின் நாட்டில் 44,680 பெண்கள் விதவைகளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு முன்னர்த் தனித்து வாழும் தாய்மார்களின் எண்ணிக்கை உயர்வு 8.3 விழுக்காடாக இருந்தது. நாட்டின் நிலையற்ற பொருளாதாரச் சூழல் காரணமாக விவாகரத்துகளும் அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை  மேலும் அதிகரிப்பதற்குச் சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

இதன் அடிப்படையில், தனித்து வாழும் தாய்மார்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில்  தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிளப்பைத் தொடங்கும்படி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள பாங்கி ரிசோர்ட் தங்கும் விடுதியில் சிலாங்கூர் மகளிர் மன்ற நிகழ்வைத் தொடக்கி வைத்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :