ECONOMYPBTPENDIDIKANSELANGOR

கோத்தா கெமுனிங்  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்  விநியோகம்

சுபாங் ஜெயா, மார்ச் 29- கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி  ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 100 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஷா ஆலம், கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் சார்பில் சீருடை உள்ளிட்ட உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சிலாங்கூர் இந்தியர் கோல்பர்ஸ் சங்கத்தின் ஆதரவிலான இந்த நிகழ்வு ஆலயத் தலைவர் டத்தோஸ்ரீ நாதன் சுப்பையா தலைமையில் இங்குள்ள துன் சம்பந்தன் வாவாசான் தமிழ்ப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுபாங் ஜெயா மற்றும் ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள நான்கு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு  இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

துன் சம்பந்தன் பள்ளியைச் சேர்ந்த 23 மாணவர்கள், சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 51 மாணவர்கள், ஈபோர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 7 மாணவர்கள், ஐக்கோம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்கள் தலா 133 வெள்ளி மதிப்பிலான  பள்ளி சீருடை, காலணி மற்றும் புத்தகப் பை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ நாதன் சுப்பையா, கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவுவதற்காக திரட்டப்பட்ட நிதியில் எஞ்சியிருக்கும் 20,000 வெள்ளியை இத்திட்டத்திற்கு பயன்படுத்த ஆலய நிர்வாக முடிவெடுத்ததாக கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்த நான்கு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கும் திட்டத்திற்கு 13,000 வெள்ளி செலவிடப்பட்டதாக கூறிய அவர், பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் ஆலயத்தின் சார்பில் திரட்டப்படும் நிதியைக் கொண்டு உதவிகள் வழங்கப்படும் என்றார்.

சிலாங்கூர் இந்தியர் கோல்பர்ஸ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழ்ப்பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அண்ட்ருசன் தனதுரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் மா.ஜோன்சன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளி சீருடை உள்ளிட்ட உதவிப் பொருள்களை வழங்க முன்வந்த கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் சிலாங்கூர் இந்தியர் கோல்பர்ஸ் சங்கப் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இந்நிகழ்வில் துன் சம்பந்தன் பள்ளி மாணவர்களிடம் உதவிப் பொருள்கள் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட வேளையில் மற்ற பள்ளி மாணவர்களுக்கான பொருள்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Pengarang :