ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரிலுள்ள ஆறுகள் பாதுகாப்பான தரத்தைக் கொண்டுள்ளன- மந்திரி புசார்

ஷா ஆலம், மார்ச் 29– சிலாங்கூரிலுள்ள ஆறுகளில் நீரின் தரம் பாதுகாப்பானதாக இருப்பதோடு பயனீட்டாளர்களுக்கு விநியோகிப்பதற்கு ஏதுவாக சுத்திகரிக்கக்கூடியதாகவும் உள்ளன.

சிலாங்கூரிலுள்ள பல பெரிய ஆறுகளில் நீரின் தரம் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் உள்ளது சுற்றுச்சூழல் துறையின் நீர் தர குறியீட்டின் வழி தெரியவந்துள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளான் ஆறு மற்றும் லங்காட் ஆற்றின் ஒரு பகுதி மிதமான தரத்தைக் கொண்டுள்ளதை அந்த அறிக்கை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

சில ஆறுகளில் தரக் குறியீடு 89 ஆக உள்ளது. சிறப்பான தரத்தை இது பிரதிபலிக்கிறது. சுற்றுச்சூழல் துறையின் விதிகளின் படி மிதமான தரத்தைக் கொண்ட நீரை சுத்தமான நீராக மாற்ற முடியும். ஆனால் அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்றார் அவர்.

இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்திற்கும் (லுவாஸ்) அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள முக்கிய நதிகளில் நீர் சுத்தமாக உள்ளதை சுற்றுச்சூழல் துறையின் நீர் தர குறியீடு காட்டுவதாக சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இதனிடையே, வரும் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை வறட்சி காலம் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில்  கொண்டு அரசாங்கம் மாநிலத்திலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டத்தை மாநில அரசு கண்காணித்து வரும் என்று அமிருடின் சொன்னார்.

ஒரே நீர்த்தேக்கத்தில் மட்டும் நீர்மட்டம் ஒரு விழுக்காடு குறைந்துள்ளது. மற்ற நீர்த் தேக்கங்கள் 100 விழுக்காட்டு கொள்ளளவைக் கொண்டுள்ளன. வானிலை ஆய்வுத் துறையின் அறிவிப்புகளின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார் அவர்.


Pengarang :