ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க 1.5 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஏப் 8- நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக மாநில அரசு 1 கோடியே 41 லட்சத்து 50 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் குறிப்பாக செலாயாங் நகராண்மைக் கழகத்திற்குட்பட்ட பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாறைகளை வலுப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சீரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயம், அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய், இந்தான் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் 16 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, அம்பாங்கில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 138,000 வெள்ளியை அங்கீகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமுற்ற ஒருவருக்கு 5,000 வெள்ளி வழங்கப்பட்டது.  சேதமுற்ற 11 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5,000 வெள்ளியும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 500 வெள்ளியும் வழங்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :