ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 10,177 ஆக குறைந்தது 

ஷா ஆலம், ஏப் 10-  கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 10,177 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 14,944 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

நாட்டில் நோய்த் தொற்றின் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 153,463 ஆகும் எனக் கூறிய அவர், அவர்களில் 149,994 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 310 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப்பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 0.62 விழுக்காடாக அல்லது 63 பேராக உள்ள வேளையில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை 10,114 பேர் அல்லது 99.38 விழுக்காட்டினர் கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

மொத்தம் 2,964 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 195 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 காரணமாக நேற்று 21 பேர் உயிரிழந்த வேளையில் இந்நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35,280 ஆக உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.

நேற்று மொத்தம் 15,132 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 28 ஆயிரத்து 963 ஆக பதிவாகியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

நேற்று பதிவான இரண்டு நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக வருமாறு-

பிரிவு 1- 5,767 சம்பவங்கள் ( 56.67 விழுக்காடு)

பிரிவு 2- 4,347 சம்பவங்கள் (42.71 விழுக்காடு)

பிரிவு 3- 31 சம்பவங்கள் (0.30 விழுக்காடு)

பிரிவு 4- 14 சம்பவங்கள் (0.14 விழுக்காடு)

பிரிவு 5- 18 சம்பவங்கள் (0.18 விழுக்காடு)


Pengarang :