ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா ஜூலையில் தாக்கல் செய்யப்படும்- பிரதமர்

புத்ராஜெயா, ஏப் 11 – வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது  கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட உள்ள அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா (எண்.3) 2022 உட்பட முதலில் தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கும் காரணத்தால் கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதாவை தாமதப்படுத்தவோ அல்லது தாக்கல் செய்வதைத் தவிர்க்கவோ அரசாங்கத்திற்கு எந்த நோக்கமோ எண்ணமோ இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நேற்று இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா மீதான சிறப்பு விளக்கமளிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதாவை தாக்கல் செய்வது தொடர்பான விஷயங்களில் அரசாங்கம் நேர்மையாக இல்லை எனக் கூறி குழப்பமான நிலையிலுள்ள சில தரப்பினர் இப்பிரச்சினையை சர்ச்சையாக்க முயற்சி செய்கின்றனர் என்று அவர் சொன்னார்.

அரசியலமைப்பு (திருத்த) மசோதா (எண்.3) 2022 மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது 148 வாக்குகளுக்கு மேல்  பெற்றவுடன் கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா மீதான விவகாரங்களை கவனிப்பதற்கு  அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள், கல்விமான்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அரசு அமைக்கும் என்று பிரதமர் கூறினார்.

வரும் ஜூலை  நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தின் போது இந்தச் சட்டத்தை தாக்கல் செய்வதே அரசாங்கத்தின் இலக்காக இருப்பதால் இந்த விவகாரத்தை விரைவுபடுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :