ECONOMYMEDIA STATEMENTPBT

மலிவு விலைத் திட்டத்தில் குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை- பொதுமக்கள் மனநிறைவு

சிகிஞ்சான், ஏப் 17- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (பி.கே.பி.எஸ்.) மேற்கொள்ளப்படும் மக்கள்  பரிவு விற்பனைத் திட்டத்தில் உணவுப் பொருள்கள் சந்தையை விட குறைந்த விலையில் விற்கப்படுவது குறித்து பொதுமக்கள் மனநிறைவு தெரிவித்தனர்.

இங்குள்ள சிகிஞ்சான் சட்டமன்றத் தொகுதி சேவை மைய வளாகத்தில் நடைபெற்ற மலிவு விற்னையில் பொருள்கள் வாங்க வந்தவர்களிடம் பேட்டி கண்ட போது இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த சந்தையில் தாம் நான்கு கோழிகள் இரண்டு தட்டு முட்டைகள் மற்றும் இதர சில பொருள்களை வெறும் 50.00 வெள்ளிக்கு வாங்கியதாக யூனுஸ் யாஹ்யா (வயது 59) கூறினார்.

இங்கு பொருள்கள் மிக மலிவான விலையில் விற்கப்படுகின்றன. மற்ற இடங்களில் இப்பொருள்களை இந்த விலைக்கு வாங்க முடியுமா என்று தெரியவில்லை. இத்திட்டம் குறைந்தது வாரம் ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், 100 வெள்ளிக்கும் அதிகமாக பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு  விலைக் கழிவுக்கான பற்றுச் சீட்டுகளை வழங்கும் திட்டத்தை மாநில அரசும் பி.கே.பி.எஸ்.சும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இந்த விற்பனைத் திட்டம் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்பதோடு வாங்கும் பொருள்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று ஆங் மெங் என் (வயது 42) கூறினார்.

இங்கு பொருள்கள் மிகவும் மலிவான விலையில் விற்கப்படுகின்றன. வாரம் ஒரு முறை இத்திட்டத்தை அமல்படுத்தினால் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் பயன்பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இத்திட்டம் குறித்து கருத்துரைத்த ஜூனைடா மாட் ரஷிட் (வயது 45) என்ற குடும்ப மாது, மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மாநில அரசுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.


Pengarang :