ECONOMYHEALTHNATIONAL

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற 60 வயதுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யலாம்

கோலாலம்பூர், ஏப் 23– இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியை (பூஸ்டர்) பெறுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்த 60 வயதுக்கும் மேற்பட்டோர் வருகைக்கான முன்பதிவு செய்வதற்கான இணைப்பை நேற்று தொடங்கி கட்டம் கட்டமாக மைசெஜாத்ரா செயலி வாயிலாகப் பெறுவர்.

அந்த இணைப்பைப் பெரும் நபர்கள் பட்டியலிடப்பட்ட தடுப்பூசி மையங்களில் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவோர், அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களாகவும் குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு முன்னர் முதலாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம் என்பது நிபந்தனையாகும் என அவர் தெரிவித்தார்.

முதலாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றப் பின்னர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு  ஆளானவர்கள் அந்நோயிலிருந்து முற்றாக குணமடைந்து  மூன்று மாதங்கள் கழித்து இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

கடுமையான சுவாசப் பிரச்னை, இருதய நோய், இருதய இரத்த நாள பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பிரச்னை மற்றும் நரம்பு சார்ந்த கடும் பிரச்னைகளை  எதிர்நோக்கியுள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு பைசர் தடுப்பூசி இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியாக செலுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

ஆரோக்கியமாக உள்ள 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியை பெறவிரும்பும் பட்சத்தில் அது குறித்து மருத்துவர்களிடம் கலந்தாலோசிப்பது நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :