ECONOMYNATIONAL

கெஅடிலான் தேர்தல்- கட்சியின் தொகுதி மற்றும் உயர்மட்டப் பதவிகளுக்கு 11,282 பேர் போட்டி

கோலாலம்பூர், ஏப் 23– கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டுத் தேர்தலில் தொகுதி மற்றும் உயர்மட்டப் பதவிகளுக்கு மொத்தம் 11,282 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனு தொடர்பான ஆட்சேபம் மற்றும் மேல் முறையீடு செய்வதற்கான காலக் கெடு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் கட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலில் இந்த எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது.

இத்தேர்தலில் சில வேட்பாளர்கள் தங்களை பெயரை தாங்களாகவே முன்மொழிந்த வேளையில் மேலும் சில வேட்பாளர்களின் பெயரை கட்சியின் இதர உறுப்பினர்கள் முன்மொழிந்ததாக கட்சித் தேர்தல் குழுவின் தலைவர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா கூறினார்.

ஆட்சேபம் மற்றும் மேல் முறையீட்டுக் கட்டங்களுக்கு முன்னதாக மொத்தம் 11,290 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. எனினும் ஆட்சேபம் தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் போது திவால் மற்றும் கருப்பு பட்டியலிடப்பட்டவர்கள் தொடர்பில் எண்மர் மீது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து கட்ட சோதனைகளையும் கடந்த 11,282 பேர் வேட்பாளர்களாக இறுதி செய்யப்பட்டனர்.அவர்களில் கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்குப் போட்டியிடும் 20 பேரும் அடங்குவர் என்றார் அவர்.

கெஅடிலான் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த காரணத்தால் அவர் கட்சியின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு பட்டியலை https://pemilihankeadilan2022.com/  எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :