ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இறுதி நாள் மே 31 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், மே 12- பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித்  திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான இறுதி நாள் மே 15 ஆம் தேதியிலிருந்து மே 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இம்மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி  நடவடிக்கை செயல்குழுவின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக துணை சுகாதார அமைச்சர் 1 டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இறுதி நாளான மே 15 ஆம் தேதியின் போது நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் காரணமாக நீண்ட பொது விடுமுறை  வழங்கப்பட்டது மற்றும் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டிருந்தது ஆகிய அம்சங்களைக் கருத்தில்  கொண்டு இந்த  கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

தங்கள்  பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் வசதிக்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

எனினும், மைசெஜாத்ரா செயலி வாயிலாக தடுப்பூசிக்கு பதிவு  மற்றும் வருகைக்கான முன்பதிவை செய்வதற்கான இறுதி நாளாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட மே 8 ஆம் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்பதோடு அந்த தேதிக்குப் பிறகு வருகைக்கான முன்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அவர் கூறினார்.

 


Pengarang :