ANTARABANGSAECONOMYSUKANKINI

சீ போட்டி- கராத்தே வீராங்கனை ஷமளாராணி தங்கம் வென்றார்

ஹனோய், மே 19- இங்கு நடைபெற்று வரும் 13வது சீ போட்டியில் கராத்தே தற்காப்புக் கலை சார்ந்த ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இப்போட்டியில் மகளிருக்கான 50 கிலோ குமித்தே பிரிவில் மலேசியாவின் ஷாமளாராணி சந்திரன் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியில் முதன் முறையாக களம் இறங்கிய ஷாமளாராணி, தொடக்க ஆட்டத்திலேயே மிகச் சிறப்பாக ஆடி வெற்றி வாகை சூடினார்.

இறுதிச் சுற்றில் தாய்லாந்து போட்டியாளர் கை உடைந்த நிலையில் போட்டியிலிருந்து  பாதியிலேயே விலகியதைத் தொடர்ந்து 24 வயதுடைய ஷாமாளாராணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக, இப்போட்டியின் இரண்டாம் சுற்றில் இந்தோனேசியாவின் ரிரிஹோனா ஷரோன் வெர்லினாவை 9-1 என்ற புள்ளிக் கணக்கிலும் மூன்றாம் சுற்றில் லாவோஸ் விளையாட்டாளர் லாயோங் கெங்தோங்கை 8-0 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தி ஷாமளாராணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இப்போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஷாமளாராணி, இந்த சீ போட்டியை எதிர்கொள்வதற்காக அண்மைய சில ஆண்டுகளாக தாம் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிட்டார்.

சீ போட்டியில் மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவது எனது லட்சியமாக இருந்தது. அந்த லட்சியம் நனவானது ஏதோ கனவு போல் எனக்கு தோன்றுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :