ECONOMYMEDIA STATEMENT

சோளப் பயிரீட்டுத் திட்டம் ஆண்டுக்கு ஒரு கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டும்-பி.கே.பி.எஸ். நம்பிக்கை

ஷா ஆலம், மே 19- நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாஸ் மற்றும் சிலாங்கூரின் கோல லங்காட் செலத்தான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள தானியச் சோள பயிரீட்டுத் திட்டத்தின் வாயிலாக ஆண்டொன்றுக்கு 5,490 மெட்ரிக் டன் சோளத்தை உற்பத்தி செய்ய முடியும்.

அவ்விரு இடங்களிலும் உள்ள 283.1 ஹெக்டர் நிலத்தில் (700 ஏக்கர்) மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் கிடைக்கும் விளைபொருள் உள்நாட்டு கால் நடை வளர்ப்போரின் தேவைக்குப் பயன்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

தற்போது டன் ஒன்றுக்கு 1,950 வெள்ளியாக இருக்கும் தானிய சோளத்தின் விலை அடிப்படையில் இந்த பயிரீட்டுத் திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 70 லட்சம் வெள்ளியை வருமானமாக ஈட்ட முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் கோழி தீவன விலையைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த சோள பயிரீட்டுத் திட்டம்  உரிய பலனைக் கொடுக்கும் என தாங்கள் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

தானியச் சோளப் பயிரீட்டுத் திட்டம் தொடர்பில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாடு கழகத்திற்கும் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடம் சடங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :