ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீஸ் அதிரடி- வெ. 2.6 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், மே 29- தலைநகரில் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரை தயாரிப்பு கூடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள இரு வீடுகள் மீது போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இச்சோதனையில் போதை மாத்திரை தயாரிப்பு கும்லின் முக்கிய புள்ளி என நம்பப்படும் ஆடவரும் சீன நாட்டு பிரஜைகளான மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

அன்றைய தினம் மாலை 4.30 மணி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 48 முதல் 56 வயது வரையிலான அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அவ்விரு வீடுகளும் தலா 2,500 வெள்ளி வாடகைக்கு எடுக்கப்பட்டு போதை தயாரிப்புக் கூடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறிய அவர், இரவு விடுதிகள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் இந்த போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வந்தன என்றார்.

இந்த கும்பல் கடந்தாண்டு இறுதி தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு 2 கோடியே 65 லட்சம் வெள்ளி என மதிப்பிடப்படுகிறது. அக்கும்பலிடமிருந்து இரு வாகனங்கள், ரொக்கம், கைக் கடிகாரம், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சோதனையின் போது கைதான மூன்று சீன நாட்டு பெண்களும் சுற்றுலா விசாவில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்  நாட்டிற்கு வந்த து விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :