ALAM SEKITAR & CUACAECONOMY

அனுமதியின்றி செயல்பட்ட பழைய ஆடை விற்பனை மையம் மீது நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 2- முறையான அனுமதியின்றி செயல்பட்ட  பழைய ஆடை சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தை மூட உலு சிலாங்கூர் நகராண்மைக்  கழகம் உத்தரவிட்டது.

ஜாலான் கே.கே.பி.-ராசா சாலையில் (லாடாங்  உலு சிலாங்கூர்) உள்ள லோட் 792 எனுமிடத்தில் நகராண்மை கழகம் மேற்கொண்ட சோதனையின் போது அம்மையம் நடவடிக்கை உட்படுத்தப்பட்டது.

அந்த மையத்தில் அதிரடிச் சோதனையை மேற்கொண்ட போது ஆடைகளை ஃபோர்க்லிப்ட் இயந்திரம் மூலம் டிரேலர் லோரியில் ஏற்றும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்ததை தாங்கள் கண்டதாக நகராண்மைக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் 2007 ஆம் ஆண்டு வர்த்தக துணைச் சட்டத்தின் 3 மற்றும் 38(1) பிரிவுகளின் கீழ் அந்த மையம் சீல் வைக்கப்பட்டதோடு டிரெய்லர் லோரி மற்றும் ஃபோர்க்லிப்ட் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

அந்த மையம் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் உள்பட எந்த தரப்பினரிடமிருந்தும் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.

நீரோடை ஒன்றின் அருகில் இந்த ஆடை சேகரிப்பு மற்றும் விற்பனை மையம் அமைந்துள்ளதால் நீர் மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது போன்ற சட்டவிரோத வர்த்தக மையங்களுக்க எதிரான சோதனை நடவடிக்கையை தமது தரப்பு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் நகராண்மைக் கழகம் கூறியது.


Pengarang :