ECONOMYSELANGOR

அனுமதியின்றி குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்யும் விவகாரம் மறுஆய்வு- பெ.ஜெயா மாநகர் மன்றம் தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 3– குடியிருப்பாளர்களுக்கு தொல்லை ஏற்படும் வகையில் முறையான அனுமதியின்றி வீடுகளை மறுசீரமைப்பு செய்யும் விவகாரத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மறும் ஆய்வு செய்யவுள்ளது.

சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பை பாதிக்கும் விஷயமாக இது விளங்குவதால் இதில் சமரசப்போக்கை மாநகர் மன்றம் ஒரு போதும் கடைபிடிக்காது என்று துணை டத்தோ பண்டார் ஷரிபா மர்ஹாய்னி சைட் அலி கூறினார்.

வட்டார மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் இணைக் கட்டிடங்கள் இடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா பசுமை சுற்றுச்சூழல் வீடுகளுக்கு மதிப்பீட்டு வரிச் சலுகை வழங்கும் திட்டம் மற்றும் எம்.பி.பி.ஜே. இ-ரெபாட் செயலி அறிமுகம் ஆகியவற்றை இங்குள்ள மாநகர் மன்றத் தலைமையகத்தில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

புனரமைப்பு மற்றும் இணைக்கட்ட நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்வதாக இருந்தால் அது குறித்து ஊராட்சி மன்றங்களிடமிருந்து எழுத்துப் பூர்வ அனுமதியைப் பெற்றிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது போன்ற சட்டவிரோத மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் தீவிபத்து அல்லது வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு ஊராட்சி மன்றங்களுக்கு உள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :