ECONOMYTOURISM

மெர்டேக்கா சதுக்கத்தில் மின்- ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு அனுமதியில்லை

கோலாலம்பூர், ஜூன் 6 – இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. அந்த தடம் பொதுச் சாலையாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

ஆர்ஜிதம் செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர இதர பொதுச் சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் சமீபத்திய உத்தரவுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் கூறியது.

அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைக்காக பொதுமக்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் நேற்று  கைப்பற்றப்பட்டதாகவும் மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு மாநகர் மன்றம்  எந்த அனுமதியும் வழங்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை செராஸ், ஜாலான் லொம்போங்கில் உள்ள மாநகர் மன்றத்தின் பறிமுதல் கிடங்கிற்கு கொண்டு செல்ல அமலாக்கப் அதிகாரிகள்  முற்பட்ட போது அவர்களின் பணிக்கு இடையூறு  விளைவிக்க முயன்ற மின்-ஸ்கூட்டர் நடத்துநர்களுக்கு எதிராக  காவல் துறையில்  புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.

மைக்ரோ-மொபிலிட்டி வாகனங்களை சாலைகளில் பயன்படுத்த  உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்  கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

மொபெட் என்பது  மின்சாரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோமீட்டருக்கு  குறைவான வேகத்தில் பயணிக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட  வாகனமாகும்.


Pengarang :