ANTARABANGSAECONOMYPENDIDIKANTOURISM

அனைத்துலக புத்தக விழா- பெவிலியன் சிலாங்கூர் காட்சிக் கூடத்திற்கு 3 நாட்களில் 10,000 பேர் வருகை

கோலாலம்பூர், ஜூன் 6– கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் அமைக்கப்பட்டுள்ள மாநில அரசின் கண்காட்சிக் கூடமான சிலாங்கூர் பெவிலியனுக்கு இந்த விழா தொடங்கி மூன்று நாட்களில் சுமார் 10,000 பேர் வருகை புரிந்துள்ளனர்.

கோலாலம்பூர் வாணிக மையத்தில் நடைபெறும் இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சிக் கூடத்தின் வழி சிலாங்கூர் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் இயக்குநர் டத்தின் படுக்கா மஸ்தூரா முகமது கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த புத்தக விழா தொடங்கியவுடன் பெவிலியன் சிலாங்கூர் காட்சிக் கூடத்தில் மக்கள் குவியத் தொடங்கினர். அன்றைய தினம் மட்டும் 2,900 பேர் இந்த கூடத்திற்கு வருகை புரிந்தனர் என்று அவர் சொன்னார்.

நமது கண்காட்சிக் கூடத்தில் நாற்காலிகள் மற்றும் பானங்களை ஏற்பாடு செய்துள்ளோம். நீண்ட தொலைவு நடந்து களைத்துப் போனவர்கள் ஓய்வெடுப்பதற்காக இவ்விடம் நாடி வருகின்றனர். அவ்வாறு வருவோருக்கு மாநில அரசின் திட்டங்கள் குறித்து நமது அதிகாரிகள் விளக்கம் தருகின்றனர் என்றார் அவர்.

சிலாங்கூர் அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் இந்த பெவிலியன் சிலாங்கூர் காட்சிக் கூடத்தில் இடம் பெற்றுள்ளன. காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த காட்சிக் கூடம் திறந்திருக்கும்.

இந்த பெவிலியன் சிலாங்கூரில் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட், யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர், சிலாங்கூர் மாநில மரபு மற்றும் பாரம்பரிய கழகம் உள்ளிட்ட 19 அரசு நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ளன.


Pengarang :