ANTARABANGSAECONOMY

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்ட 35 பேர் தாய்-மியன்மார் எல்லையில் மீட்கப்பட்டனர்

பேங்காக், ஜூலை 30- கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறும் மோசடிக் கும்பலின் வலையில் சிக்கிய 35 மலேசியர்கள் தாய்லாந்து-மியன்மார் எல்லையில் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த 35 பேரும் மீட்கப்பட்டதாக தாய்லாந்துக்கான மலேசிய தூதர் டத்தோ ஜோஜி சாமுவேல் கூறினார்.

மீட்கப்பட்டவர்களில் 30 பேர் பேங்காக்கிலுள்ள மலேசிய தூதரகம் மற்றும் சொங்க்லாவில் உள்ள தூதரக அலுவலகத்தில் உதவியை பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் நாட்டில் தங்கியிருந்தது ஆகிய குற்றங்களின் பேரில் அவர்கள் மியன்மார் எல்லையில் உள்ள மா சோட் தாய்லாந்து குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

செல்லத்தக்க பயணப் பத்திரங்களைக் வைத்திருந்த இதர ஐந்து மலேசியர்களும் பத்திரமாக நாடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல் வலையில் மேலும் அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு யாராவது சென்று ஆய்வு மேற்கொண்டால் தவிர பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு எண்ணிக்கை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார் அவர்.

இத்தகைய மோசடி கும்பலின் வலையில் சிக்கிய 20 வயதுடைய சிலாங்கூரைச் சேர்ந்த ஆடவரை மீட்டதே மலேசிய தூதரகம் கையாண்ட இத்தகைய முதல் சம்பவம் என அவர் கூறினார். மாதம் 5,000 முதல் 8,000 அமெரிக்க டாலர் வரை சம்பளம் பெறும் வேலை வேலை தாய்லாந்தில் உள்ளதாக கூறி அக்கும்பல் அவரை ஏமாற்றியதாக அவர் சொன்னார்.


Pengarang :