ECONOMYMEDIA STATEMENT

செரெண்டா அருகே சாலை விபத்து- மூன்று இந்தியர்கள் பலி

உலு  சிலாங்கூர், ஜூன் 30– பெரோடுவா மை ரகக் கார் மற்றும் டிரெய்லர் லோரி சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரு பெண் உள்பட மூன்று இந்திய இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் செரெண்டா, தேசிய தொழில் திறன் மேம்பாட்டு மையத்தின் எதிரே நிகழ்ந்த  இந்த கோர விபத்தில் பலியானவர்கள் பி. ஜனனி (வயது 25), பி.எஸ். தமிழ்ச் செல்வம் (வயது 25) மற்றும் பி.எஸ். சசிதரன் (வயது 18) என அடையாளம் கூறப்பட்டது.

இவ்விபத்து குறித்து அதிகாலை 4.30 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம்  காமிஸ் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது மைவி ரகக் கார் ஒன்றும் டிரெய்லர் லோரியும் விபத்தில் சிக்கியுள்ளதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர்.

இவ்விபத்து நிகழ்ந்த போது அந்த கார் ரவாங்கிலிருந்து செரெண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் டிரெய்லர் லோரி எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அம்மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் 39 வயதான லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர்த்தப்பினார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :