ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோல சிலாங்கூரில் இன்று நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் 7,500 பேர் பங்கேற்பர்

கோல சிலாங்கூர், ஜூலை 2- கோல சிலாங்கூர் அரங்கில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர்  பென்யாயாங் நிகழ்வில் 7,500 பேர் வரை பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு மெருகூட்டும் வகையில் மக்கள் விளையாட்டு, வர்ணம் தீட்டும் போட்டி, மின்-விளையாட்டு உள்ளிட்ட அங்கங்களும் இடம் பெறுகின்றன.

இந்நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக நாட்டின் பிரபல இசைக் கலைஞர்களான வானி ஹஸ்ரித்தா மற்றும் மிஸ்டர் எக்ஸ் பஸ்கர் ஆகியோரின் கலை நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

மாநில அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்நிகழ்வில் மாநில அரசின் 23 துணை நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

மாநில மக்களுக்கு கூடுதல் அனுகூலங்களை வழங்கும் நோக்கில் நடப்பிலுள்ள கிஸ் எனப்படும் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்திற்கு மாற்றாக பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கிஸ் திட்டத்தின் கீழ் 25,000 பேர் மட்டுமே பயன் பெற்று வந்த நிலையில் பிங்காஸ் திட்டம் 30,000 பேர் வரை பயன் பெறுவதற்குரிய வாய்ப்பினை வழங்குகிறது.

இது தவிர, பொது மக்கள் இலவசமாக மருத்துவ சோதனையை மேற்கொள்ள உதவும் சிலாங்கூர் சாரிங் திட்டமும் இந்நிகழ்வில் மேற்கொள்ளப்படுகிறது. 15 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் 5,000 பேர் பயன் பெறுவர்.


Pengarang :