ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் மக்கள் சுகாதாரத் திட்ட அமலாக்கத்திற்கு வெ. 6.7 கோடி ஒதுக்கீடு

கோல  சிலாங்கூர், ஜூலை 2- மக்களின் வாழ்க்கை சுபிட்சமுடன் இருப்பதை உறுதி செய்ய ஐ.எஸ்.பி. எனப்படும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் சுகாதார தொகுப்பிற்கு 6 கோடியே 70 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட், இருதய சிகிச்சை திட்டம், சேஹாட் சிலாங்கூர் திட்டம்,  சாரிங் சிலாங்கூர் ஆகிய பத்து முதன்மை திட்டங்களும் அதில் உள்ளடங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவை தவிர, புற்று நோய் சோதனை, சிறார் ஊட்டச் சத்து திட்டம், மன ஆரோக்கியத் திட்டம், காச நோய் சிகிச்சைத் திட்டம், கண் பரிசோதனை மற்றும் மகளிர் மருத்துவப் பரிசோதனைத் திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கான சுகாதாரத் திட்டத்தை குறிப்பாக, பெடுலி சேஹாட் திட்டத்தை நாம் தொடர்ந்தாற் போல் தரம் உயர்த்தி வருவோம். இத்தகைய திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவும் முடிந்தால் காப்புறுதி பாதுகாப்புத் திட்டத்தை அமல் படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்.

உண்மையைச் சொல்லப் போனால் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் சுகாதாரத்தின் தரம் உயர்ந்து வருகிறது. முன்பு மக்களின் ஆயுள்காலம் 68 முதல் 69 வயதாக இருந்தது. பொதுமக்கள் மத்தியில் உடலாரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆயுள்காலம் தற்போது 75 வயதாக உயர்ந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :