ANTARABANGSAHEADERADMEDIA STATEMENT

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு 11 புதிய திட்டங்கள் – மந்திரி பசார் தகவல்

கோல சிலாங்கூர், ஜூலை 2- மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக 11 புதிய திட்டங்களை உள்ளடக்கிய இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த 11 புதிய திட்டங்களுடன்  சேர்த்து மக்களின் சுபிட்சத்தையும் நீடித்த மேம்பாட்டையும் உறுதி செய்வதற்காக மொத்தம் 44 திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மாநில மக்கள் இலவசமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள உதவும் சிலாங்கூர்  சாரிங் திட்டம், இல்திஸாம் அனாக் பென்யாயாங், புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிலாங்கூர் மன ஆரோக்கியத் திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும் என அவர் சொன்னார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 33 திட்டங்களை நாம் ஒருங்கிணைத்தோம். தற்போது இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் மூலம் 60 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மேலும் 11 திட்டங்களை இணைத்துள்ளோம். என்றார் அவர்.

கோல சிலாங்கூர் பிரதான அரங்கில் இன்று நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் மீது பரிவு, நேசம் மற்றும் அக்கறை கொண்ட காரணத்தால் மாநில அரசு பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு பதிலாக இல்திஸாம் சிலாங்கூர்  பென்யாயாங் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

நாங்கள் மக்களுக்கு உதவி செய்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்களை நேசிக்கவும் செய்கிறோம். ஆகவேதான் அவர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களை அமல்படுத்துகிறோம் என்றார் அவர்.


Pengarang :