ECONOMYMEDIA STATEMENT

11 வாகனங்களை மோதித் தள்ளிய லோரி ஓட்டுநருக்கு 33 குற்றப்பதிவுகள் 

ஜோகூர் பாரு, ஜூலை 8– ஜோகூர் பாலத்தில் நேற்று 11 வாகனங்களை மோதித் தள்ளிய லோரி ஓட்டுநருக்கு பல்வேறு சாலைக் குற்றங்களுக்காக 33 பழைய குற்றப்பதிவுகள் உள்ளன.

இது தவிர, ஆறு சம்மன்களுக்கான அபராதத் தொகையை அந்த 34 வயது ஆடவர் இன்னும் செலுத்தவில்லை என்று ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் கூறினார்.

சிறுநீர் சோதனையில் அந்த லோரி ஓட்டுநர் போதைப் பொருளை உட்கொண்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டதாக இன்று அவர் தெரிவித்தார்.

அந்த லோரி ஓட்டுநர் விசாரணைக்காக மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் நீதிமன்ற துணைப் பதிவதிகாரி மெலடி வூன் ஸீ முன் வழங்கினார்.

முன்னதாக, கருப்பு நிற டி சட்டையும் நீல நிற ஜீன்சும் அணிந்திருந்த அந்த ஆடவர் இன்று காலை 10.00 மணியளவில் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

நேற்று காலை 9.25 மணியளவில் கல் துகள்களை ஏற்றியிருந்த அந்த டிரெய்லர் லோரி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை  இழந்து 11 வாகனங்களை மோதித் தள்ளியது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிருட்சேதம் ஏற்படவில்லை.


Pengarang :