ECONOMYNATIONALSUKANKINI

காமன்வெல்த் போட்டி நேற்று தொடங்கியது-72 நாடுகளைச் சேர்ந்த 6,500 விளையாட்டாளர்கள் பங்கேற்பு

பெர்மிங்ஹாம், ஜூலை 29- பெர்மிங்ஹாம் காமன்வெல்த் 2022 போட்டி விளையாட்டு நேற்று இங்குள்ள பெர்ரி பார், அலெக்சாண்டர் அரங்கில் சுமார் 30,000 பார்வையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் தொகுப்பாளராக பணியாற்றி அனைத்துலக நிலையில் புகழ் பெற்ற மார்ட்டின் கிரீன் மற்றும் பிரபல தொலைக்காட்சித் தொடரான பீக்கி பிளைண்டர்ஸ் இயக்குநரும் எழுத்தாளருமான ஸ்டீவன் நைட் ஆகியோரின் அறிமுகத்துடன் இந்த நிகழ்வு தொடக்க விழா கண்டது.

மாநகரின் பன்முகத்தன்மையையும் வரலாற்றையும் சித்தரிக்கும் படைப்புகளோடு விளக்குகளின் வண்ண ஜாலம் மற்றும் வாணவெடிகளுடன் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு இந்த விழா இடைவிடாது மக்களை மகிழ்வித்தது.

இந்த நிகழ்வில் 70 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் எலிசெபத் அரசியாருக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய அரசியார் தனது பெருமிதத்தையும் காமன்வெல்த் மீதான தனது கடப்பாட்டையும் புலப்படுத்திக் கொண்டார்.

இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக கடந்த 2014 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய் உணர்ச்சிப்பூர்வ உரையாற்றியதோடு சமுதாயத்தில் பெண்களின் பங்கேற்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய அணிக்கு குவாஷ் வீராங்கனை அய்ஃபா அஸ்மானும் பளு தூக்கும் வீரர் போனி புன்யாவும் தலைமை தாங்கினர்.

வரும் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த அனைத்துலக நிலையிலான போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 6,500 விளையாட்டாளர்கள் பங்கு கொள்கின்றனர்.


Pengarang :