ECONOMYMEDIA STATEMENT

எழுவரிடம் வெ. 122,000 மோசடி- கார் விற்பனை முகவர் போலீசில் சிக்கினார்

கோலாலம்பூர், ஆக 11– வாடிக்கையாளர்களை ஏமாற்றும் புதிய கார் விற்பனை மோசடியை  போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்குறுதியளித்தபடி காரை கொடுக்காமல் ஏமாற்றி வந்த கார் விற்பனை முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த மோசடி சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சுங்கை பூலோவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் 44 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி போங் எங் லாய் கூறினார்.

காருக்கான முன்பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் அல்லாமல் தனது  வங்கிக் கணக்கில் அல்லது ரொக்கமாக செலுத்தும்படி வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்வது அந்த முகவரின் வழக்கமான பாணியாக இருந்து வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

செந்தூல் வட்டாரத்தில் மட்டும் 122,868 வெள்ளியை உட்படுத்திய ஏழு மோசடி சம்பவங்கள் தொடர்பில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல்  நேற்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த ஆடவர் இதே போன்ற மோசடி தொடர்பில் நீலாய் மற்றும் சிப்பாங்கில் செய்யப்பட்ட புகார்களுக்காக சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் தலைமையகங்களிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என அவர் சொன்னார்.

இதர மாவட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை முற்றுப் பெற்றவுடன் அந்த ஆடவர் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்றார் அவர்.


Pengarang :