ECONOMYHEALTHNATIONAL

மலேரியா பரலைத் தடுக்க அந்நியத் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம்- டாக்டர் நோர் ஹிஷாம்

ஜோகூர் பாரு, ஆக 12– மலேசியாவுக்கு கொண்டு வரப்படும் அந்நியத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பினாங்கில் அடையாளம் காணப்பட்டதைப் போல் நகர்ப்புற மலேரியா நோய்ப் பரவல் ஏற்படுவதைத் தடுக்க இந்நடவடிக்கை அவசியமாவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இருந்த போதிலும் நாட்டில் மலேரியா நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், அந்நோயினால் மரணச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்றார்.

இதனைக் கருத்தில் கொண்டு அந்நியத் தொழிலாளர்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்று அவர் சொன்னார்.

நாட்டில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான மலேரியா நோய்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பரவியவையாகும். ஆகவே, அந்நோய்த் குறித்து முன்கூட்டியே கண்டறிவதற்கு ஏதுவாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும் என்றார் அவர்.

இன்று இங்குள்ள பண்டார் டத்தோ ஓன்னில் நடைபெற்ற ‘ஏஜெண்டா நேஷனல் மலேசியா சேஹாட்‘ இயக்கத்தின் ஜோகூர் நிலையிலான நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள மலேரியா நோய் உள்நாட்டில் அல்லாமல் வெளிநாட்டிலிருந்து பரவியதாகும் என்பதால் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் மீது விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று  அவர் வலியுறுத்தினார்.


Pengarang :