ECONOMYMEDIA STATEMENT

வளர்ப்பு மகளை துன்புறுத்தியதாக புகார்- போலீசில் சிக்கினார் மூதாட்டி 

ஷா ஆலம், ஆக 12- வளர்ப்பு மகளை துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் மூதாட்டி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த மூதாட்டி தனது பத்து வயது வளர்ப்பு மகளின் கூந்தலைப் பிடித்து சாலையில் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நேற்று பின்னிரவு 12.10 மணியளவில் அம்மூதாட்டியை கோல லங்காட் தஞ்சோங் சிப்பாட்டிலுள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.

வாட்ஸ்ஆப் வாயிலாக பகிரப்பட்ட அந்த 33 விநாடி காணொளி தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த மூதாட்டி கைது செய்யப்பட்டதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் முகமது நோர் சாலே கூறினார்.

அந்த மூதாட்டி பள்ளிச் சீருடை அணிந்திருந்த அச்சிறுமியின் கூந்தலைப் பிடித்து வீட்டின் முன்புறமுள்ள சாலையில் இழுத்துச் செல்வதை சித்தரிக்கும் காட்சி அந்த காணொளியில் பதிவாகியிருந்தது.

அந்த மூதாட்டி உள்நாட்டவர் என்பதோடு முறையான பதிவின் மூலம் தத்தெடுக்கப்பட்ட அச்சிறுமியை அவர் சிறுவயது முதல் வளர்த்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அச்சிறுமி வீட்டிலிருந்து அடிக்கடி பணத்தைத் திருடும் காரணத்தால்  கோபமடைந்து தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக அந்த மூதாட்டி விசாரணையின் போது கூறினார் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமி சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவருக்கு தலையில் லேசான காயம் உண்டானதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு கூடுதல் பட்சம் 20,000 வெள்ளி வரை அபராதம், 10 ஆண்டு வரைச் சிறைத்தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றார்.


Pengarang :