ECONOMYHEALTHSELANGOR

அனைத்து தொகுதிகளிலும் ஆண்டுக்கு இரு முறை இலவச மருத்துவ சோதனை- ரவாங் உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம்,ஆக 15- மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆண்டுக்கு இருமுறையாவது சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை நடத்த வேண்டும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் பரிந்துரைத்துள்ளார்.

நேற்று ரவாங் தொகுதி நிலையில் நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட பலரும் இதே கருத்தை எதிரொலித்ததோடு மாநில அரசின் இத்திட்டத்தை பெரிதும் பாராட்டியதாக அவர் சொன்னார்.

நேற்றைய நிகழ்வில் சுமார் 500 பேர் கலந்து கொண்டு தங்கள் உடல்நிலையை சோதித்தனர். இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்கும் இத்திட்டம் தொடரப்பட வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் குறித்து ஆங்காங்கே கட்டப்பட்ட பேனர்கள்  வாயிலாவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படியும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ரவாங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் நேற்று ரவாங், 17வது மைல் தாமான் தெராத்தாய் மண்டபத்தில் நடைபெற்றது.


Pengarang :