ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போர்க்கப்பல் ஊழலுக்கு எதிரான பேரணி- 13 பேர் விசாரணைக்கு அழைப்பு

கோலாலம்பூர், ஆக 15- தலைநகர் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள பிரசித்தி பெற்ற பேரங்காடி ஒன்றின் எதிரே நேற்று நடைபெற்ற ‘கடலோரப் போர்க்கப்பல் எங்கே?‘ (எல்.சி.எஸ்.) என்ற பேரணி தொடர்பில் 13 பேரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவுள்ளனர்.

முன்னறிவிப்பின்றி  பேரணியை நடத்தியது தொடர்பில் 2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் 9(5) வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த 13 பேரும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெலிஹான் யாஹ்யா கூறினார்.

அடையாளம் காணப்பட்ட மற்றும் இன்னும் அடையாளம் காணப்படாத அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பட்டதாரி மாணவர்களை உள்ளடக்கிய 60 பேர் இந்த பேரணியில் பங்கேற்றதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் அந்த போர்க்கப்பல் ஊழலை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் மற்றும் பேனர்களை ஏந்தி முழக்கமிட்டனர்.

நேற்று மாலை 2.00 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அமைதியான முறையில் முடிவுக்கு வந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு டாங்கி வாங்கி போலீஸ் நிலையம் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தைச் சேர்ந்த சுமார் 100 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.


Pengarang :