ECONOMYMEDIA STATEMENT

பாத்தாமில் ஷாபு தயாரிப்புகூட முற்றுகையில் மலேசியர் கைது- போலீஸ் உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், ஆக 16- பாத்தாமில் உள்ள ஷாபு தயாரிப்புக் கூட நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருந்த சந்தேகத்தின் பேரில் மலேசிய நபர் ஒருவரை இந்தோனேசிய தேசிய போதைப்பொருள் நிறுவனம் கடந்த மாதம் கைது செய்ததை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், அந்த சந்தேக நபர் கைது தொடர்பில்  டிவிஒன் நியுஸ் செய்தி காணொளியில்  கூறப்பட்டுள்ளபடி அவர் போலீஸ் அதிகாரி அல்ல என்று அரச மலேசிய போலீஸ் படையின் தகவல் தொடர்பு பிரிவு இயக்குநர் ஏ.ஸ்கந்தகுரு கூறினார்.

சந்தேக நபர் மீது வன்முறை மற்றும் காவல்துறையைப் போல ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான இரண்டு குற்றப் பதிவுகள் உள்ளன என்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று நேற்று வெளியிட்ட  ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

இச்சம்பவம்  தொடர்பாக இந்தோனேசிய அதிகாரிகளுடன் பி.டி.ஆர்.எம். முழுமையாக  ஒத்துழைப்பதோடு  போதைப்பொருள் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான எந்த தகவலையும் அனுப்ப தயாராக உள்ளது என்று அவர் சொன்னார்.

முன்னதாக, ஷாபு தயாரிப்புக்கூடம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை சித்தரிக்கும் காணொளி ஒன்று  சமூக ஊடகங்களில் வைரலானது. கைதானவர்களில் ஒருவர் மலேசிய குடிமகன் மற்றும் போலீஸ் அதிகாரி என்று கூறப்பட்டது.


Pengarang :