ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மாநில பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படலாம்- மந்திரி பெசார் கோடி காட்டினார்

அம்பாங், ஆக 27- வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருந்த 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளதை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோடி காட்டினார்.

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை மூன்று வாரங்கள் முன்னதாக அதாவது வரும்  அக்டோபர் 7 ஆம்  தேதி தாக்கல் செய்ய புத்ரா ஜெயா எடுத்த முடிவின் எதிரொலியாக இந்த தேதி மாற்றம் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

நமது பட்ஜெட் தேதி நவம்பர் 25 ஆம் தேதியாகும். அதனை சற்று முன்னதாக அதாவது நவம்பர் தொடக்கத்தில் அல்லது அக்டோபர் இறுதியில் தாக்கல் செய்வதற்கான சாத்தியம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசைப் பின்பற்றி 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை முன்கூட்டியே தாக்கல் செய்வற்கான திட்டத்தை மாநில அரசு கொண்டுள்ளதா என வினப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் மூன்று வாரங்கள் முன்னதாக அதாவது அக்டோபர் 7 ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்கள்) டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் நேற்று கூறியிருந்தார்.

எனினும், பொதுத் தேர்தலை இவ்வாண்டிலேயே நடத்துவதற்காக இந்த தேதி மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.


Pengarang :