ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 340 கோடி வெள்ளியை எட்டியது

ஷா ஆலம், ஆக 31- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான காலக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில அரசின் நிதிக் கையிருப்பு 340 கோடி வெள்ளியை எட்டியது.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநில அரசின் வசமிருக்கும் மிக அதிகமான நிதி கையிருப்பு இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 14 ஆண்டுகளாக மாநில மக்களுக்காக பல்வேறு சமூக நல மற்றும் பொருளாதார திட்டங்களை சிலாங்கூர் அரசு இடைவிடாமல் மேற்கொண்டு வந்த போதிலும் மாநில அரசின் நிதிக் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் சொன்னார்.

மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தினால் மாநில அரசு திவாலாகி விடும் அல்லது மேம்பாடு காணாது போகும் என பலர் எண்ணினர். எனினும், இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையில் மாநில அரசின் நிதிக் கையிருப்பு 340 கோடி வெள்ளியை எட்டியுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநில அரசு கொண்டிருக்கும் மிக அதிகமான நிதிக் கையிருப்பு இதுவாகும் என்றார் அவர்.

நேற்றிரவு இங்குள்ள ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் மாநில நிலையிலான 65வது தேசிய தினக் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு சுமார் 1,500 கோடி வெள்ளியை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மக்கள் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், தடுப்பூசியை இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக கோவிட்-19 தடுப்பூசி கொள்முதல் மற்றும் பொது மக்களின் நலனுக்காக கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகள் கொள்முதல் என பல்வேறு நோக்கங்களுக்காக நாம் நிதியைச் செலவிட்ட போதிலும் எதிர் காலத் தலைமுறைக்காக நாம் போதுமான நிதியை சேமிப்பிலும் வைத்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு மாநில அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களில் சுமார் 20,000 கோடி வெள்ளி மதிப்பிலான 202 மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கிய முதலாவது சிலாங்கூர் திட்டமும் அடங்கும் என அவர் கூறினார்.


Pengarang :