ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சுதந்திரத்தின் மகிமையை போற்றுவோம்! சுல்தான் தம்பதியர் வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 31-   மாநில மக்கள் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தைத் போற்றி வரவேண்டும் என்று மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர்  தெங்கு பெர்மைசூரி தம்பதியர்  வேண்டுகோள்  விடுத்துள்னர்.

நாட்டின் மீது அன்பை வளர்த்து   தேசத்தின் மீதான பக்தி உணர்வை மேம்படுத்துமாறு பொதுமக்களை சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர்  கேட்டுக் கொண்டனர்.

இந்த நாடு  சுதந்திரம் அடைவதற்காக முன்னோர்கள்  செய்த  தியாகத்தையும் கடின உழைப்பையும்  மறந்துவிட்டு  “வரலாற்றுக் குருடர்களாக”  மக்கள் இருக்கமாட்டார்கள் என்று தாங்கள்  நம்புவதாக  அவர்கள் குறிப்பிட்டனர்.

தங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம் மலேசியர்கள் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாகவும் திறம்படவும் திட்டமிட முடியும் என்று 65வது தேசிய தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர்கள் கூறினர்.

சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூலில் இந்த வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டது.

 மக்கள் நல்லிணக்கம், மரியாதை, ஒற்றுமை மற்றும் பரஸ்பர சகிப்புத்தன்மையுடன் வாழ வேண்டும் என்று சுல்தான் தம்பதியர்   விரும்புகிறார்கள் என்று அந்தப் பதிவு கூறியது.

மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய அரசியல், இன, மதப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதுடன், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மிக முக்கியமாக, நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பதை அழிக்கக்கூடிய நாட்டிற்கு உள்ளும் வெளியிலும் உள்ள கூறுகளுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மக்களுக்கும் மேன்மை தங்கிய சுல்தான்  நினைவூட்டுவதாக  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Pengarang :