ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளால் கூட்டரசு சாலைகள் பாதிப்பு

கோலாலம்பூர், செப் 6- மலைப்பாங்கான இடங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகள் பொதுப்பணித்துறை அமைச்சின் கண்காணிப்பின் கீழுள்ள கூட்டரசு சாலைகள் மற்றும் மலைச்சாரல்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.

இப்பகுதிகளில் மழை காலங்களின் போது மண்சரிவு மற்றும் சகதி வெள்ளம் ஏற்படும் என்பதால் அங்குள்ள சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் சாத்தியம் உள்ளது.

இத்தகைய ஆபத்து நிறைந்த இடங்களில் ஒன்றாக கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கிளந்தான் மாநிலத்தின் குவாங் மூசா வட்டாரத்திலுள்ள லோஜிங் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கு மண்டலப் பகுதிக்கு பொதுப் பணித்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தின் போது  சாலை ரிசர்வ் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக பயிரீட்டு நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

அப்பகுதிகளில் மழை நீர் தேங்கும் காரணத்தால் மண் சரிவு ஏற்பட்டு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்படுவதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த பிரச்னையைக் களைவதற்காக  சாலையோரங்களில் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் நோக்கில் மாநில மற்றும் மத்திய அமைச்சு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கை அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசுப் கூறினார்.


Pengarang :