ALAM SEKITAR & CUACAECONOMYPBT

வெள்ளத்தில் நிவாரணப் பணிக்கு உதவ 20 வாகனங்கள்- கிள்ளான் நகராண்மைக் கழகம் ஏற்பாடு

ஷா ஆலம், செப் 24- வடகிழக்கு பருவ மழை மற்றும் கடல் பெருக்கு போன்ற பேரிடர்களின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 20 வாகனங்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் தயார் செய்துள்ளது.

நிவாரணப் பணிக்காக தயார் செய்யப்பட்டுள்ள வாகனங்களில் பிக்அப் டிரக், லோரிகள், டாங்கர் லோரிகள் மற்றும் சிறிய படகுகளும் அடங்கும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

கிள்ளான் நகராண்மை கழகப் பகுதியில் பேரிடர் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வதற்குரிய கடப்பாட்டை நகராண்மைக் கழகம் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

வாகனங்கள் தவிர்த்து, பாதுகாப்பு அங்கிகள், டிரோன் சாதனங்கள், நீரை வெளியேற்றும் பம்ப் கருவிகள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

பேரிடரின் போது 1,000 பேர் தங்குவதற்கு ஏதுவாக 17 மண்டபங்கள் மற்றும் பாலாய் ராயாக்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் கொண்டுள்ளது. டேவான் அகமது ரசாலி, டேவான் மேரு, டேவான் பெண்டாமார் 2, பாலாய் ராயா ஸ்ரீ டாமாக் ஆகிய மண்டபங்களும் அவற்றில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்திலுள் ஒன்பது மாவட்டங்களில் எட்டு வெள்ள அபாயத்தை கொண்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.

கிள்ளான், பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங், கோல லங்காட், சபாக் பெர்ணம் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் அபாயம் உள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில வடிகால் நீர்பாசனத் துறை தெரிவித்தது.


Pengarang :