ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீபாவளியை முன்னிட்டு  தாமான் லக்ஸ்மணா பெர்மாயில் மலிவு விற்பனை-அக்டோபர் 22இல் நடைபெறும்

 கோம்பாக், அக் 2- தீபாவளியைக் கொண்டாடவிருக்கும் இந்துக்களின் வசதிக்காக பத்து கேவ்ஸ் தொகுதியில் மாநில அரசின் மலிவு விற்பனை நடைபெறவுள்ளது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாமான் லக்ஸ்மணா பெர்மாயில் இம்மாதம் 22 ஆம் தேதி இந்த மலிவு விற்பனையை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தொகுதிக்கான மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் அப்துல் ரஹிம் கஸ்டி கூறினார்.

இந்த விற்பனையில் வழக்கமான அத்தியாவசியப் பொருள்களோடு ஆட்டிறைச்சியும் நியாயமான விலையில் விற்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தீபாவளி பண்டிகை இம்மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனிடையே, இங்குள்ள செலாயாங் மூலியா அடுக்குமாடி குடியியிருப்பு பகுதியில் இன்று நடைபெற்ற  பத்து கேவ்ஸ் தொகுதி நிலையிலான அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையில் கோழி, முட்டை மற்றும் மாட்டிறைச்சி ஆகியவை 90 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சந்தையை விட குறைந்த விலையில் விற்கப்படும் இப்பொருள்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு பிரமிப்பூட்டும் வகையில் உள்ளதாக அவர் சொன்னார். இது ஏழாவது விற்பனை இடம். முந்தைய ஆறு இடங்களிலும் நல்ல ஆதரவு கிடைத்ததோடு மக்கள்  காலை 8.00 மணி முதல் வரிசையில் நிற்கத் தொடங்கினர் என்று அவர் சொன்னார்.

ஒட்டுமொத்தமாக, 5,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இந்த திட்டத்தின் வழி நன்மைகளைப் பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது  என்று அவர் இன்று இங்கு விற்பனை இடத்தில் சந்தித்தபோது கூறினார்.


Pengarang :