ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இந்தோ. கால்பந்தாட்ட கலவரத்தில் 129 பேர் பலி- அனைத்து லீக் போட்டிகளும் நிறுத்தம்

மாலாங், அக் 2 - இந்தோனேசியாவில் நடைபெற்ற  கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 129 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 180 பேர் காயமுற்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு கிழக்கு ஜாவா மாநிலத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் தோல்வியடைந்த அணி ஆதரவாளர்கள் வன்செயலில் ஈடுபட்டனர். ​​

அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். நெரிசல் மற்றும் கண்ணீர் புகை காணமாக பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று கிழக்கு ஜாவா காவல்துறை தலைவர் நிகோ அஃபின்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

ரசிகர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்கினர். அவர்கள் அதிகாரிகளைத் தாக்கியதோடு  கார்களையும் சேதப்படுத்தினர் என்று நிகோ கூறினார்.

அரேமா எஃப்.சி. குழு  3 - 2 என்ற கணக்கில் பெர்செபயா சுரபயாவிடம் குழுவிடம் தோற்ற பிறகு ரசிகர்கள் திடலில் அத்துமீறி நுழையும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

காவல் படையினர் கண கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசுவதையும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதையும் அக்காட்சிகள் சித்தரித்தன.

இச்சம்பவத்தில் சுயநினைவை இழந்தவர்களை மற்ற ரசிகர்கள் தூக்கிச் செல்லப்படுவதை காண முடிந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களில் ஐந்து வயது குழந்தையும் அடங்கும் என்றும் மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடேயே, இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, அதிகாரிகள் போட்டிகளின் பாதுகாப்பை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலயுறுத்தினார். இது "தேசத்தின் கடைசி கால்பந்து சோகமாக" இருக்கும் என்று அவர் நம்புவதாகவும் கூறினார்.

விசாரணை முடியும் வரை இந்தோனேசியாவின் அனைத்து லீக் விளையாட்டுகளையும் நிறுத்தி வைக்குமாறு இந்தோனேசிய கால்பந்து சங்கத்திற்கு உத்தரவிட்டார்.

Pengarang :