ECONOMYNATIONALTOURISM

வெளிநாட்டு நிபுணர்கள் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி முக்கியத் துறைகளில் வேலை செய்யலாம்

கோலாலம்பூர், 4 அக்-  முக்கியமான மற்றும் அவசரகாலப் பணிகளைச் செய்வதற்கு உடனடியாகத் தேவைப்படும் வெளிநாட்டு நிபுணர்கள் சுற்றுலா விசா (பி.எல்.எஸ்.) அல்லது PLS@XPATS முறையைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழையலாம் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாவுட் கூறினார்.

முதலாளிகள் https://mtp.imi.gov.my/plsXpats என்ற இணைப்பின் மூலம்  விண்ணப்பிக்கலாம் என்றும், விசா தேவைப்படும் வெளிநாட்டவர்கள் இணையம் வழி விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று வேலை நாட்களுக்குள் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த புதிய நுழைவு வசதியின் மூலம் அவசர மற்றும் முக்கியமான பணிகளை உடனடியாக மேற்கொள்ள அந்நிய நாட்டினர் இங்கு 30 நாட்களுக்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இயந்திரங்களை பழுதுபார்த்தல், மின்சார சோதனை மற்றும் பொருத்துதல் போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிபுணத்துவ நிபுணர்களின் உதவி தேவைப்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வசதிக்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும் நாட்டின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்படவும் இந்த வெளிநாட்டு நிபுணர்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக கைருல் டிசைமி குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க விரும்பும் உள்ளூர் தொழில்துறையினர் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் பற்றிய கூடுதல் தகவலுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :