ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச்சட்டம் மக்களவையில் நிறைவேற்றம்

கோலாலம்பூர், அக் 6– மக்களவை நேற்று 2022ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச்சட்ட (திருத்தம்) மசோதாவை நிறைவேற்றியது. நீர் மாசுபாடு மற்றும் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் குற்றங்களுக்கு 1 கோடி வெள்ளிக்கும் மிகாத தொகையை அபராதமாக விதிக்க இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

இத்தகைய குற்றங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட அபராதம் அக்குற்றங்களால் உண்டாகும் இழப்புகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த உயர்த்தப்பட்ட தண்டனை அமல்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

உதாரணத்திற்கு ஜோகூர் மாநிலத்தின் கிம் கிம் ஆற்றில் ஏற்பட்ட மாசுபாட்டை சுத்தம் செய்வதற்கு 60 லட்சம் வெள்ளி வரை தேவைப்பட்டது. அதே போல் சிலாங்கூரில் இத்தகைய குற்றங்களால் நீர் சுத்திகரிப்பு மையங்கள் நிறுத்தப்பட்டு ஆறுகளைச் சுத்தம் செய்வதற்கு உண்டாகும் செலவு மிக அதிகமாக உள்ளது. இதில் லோரிகள் மூலம் பயனீட்டாளர்களுக்கு நீரை விநியோகிப்பதற்கு உண்டாகும் செலவு உள்ளடக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று இந்த மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பின்னர் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, 1959ஆம் ஆண்டு தொழிற்சங்க சடத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் 2022ஆம் ஆண்டு தொழிற்சங்க (திருத்தப்பட்டது) மசோதாவும் அவையில் நிறைவேற்றப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்வதை இந்த சட்டத் திருத்தம் அனுமதிப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.


Pengarang :