ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டாமன்சாரா-ஷா ஆலம் அடுக்குச் சாலை விரைவில் திறக்கப்படும்

ஷா ஆலம், அக் 12- டாமன்சாரா-ஷா ஆலம் அடுக்குச்சாலையின் (டேஷ்) கட்டுமானப் பணிகள் முற்றுப்பெறும் தருவாயில் உள்ளது. சுமார் 50,000 வாகனமோட்டிகள் பயன்பெறக் கூடிய இந்த நெடுஞ்சாலை விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

புஞ்சா பெர்டானா மற்றும் பெஞ்சாலாவை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை திறக்கப்படுவதன் மூலம் அவ்விரு இடங்களுக்கிடையிலான போக்குவரத்து நேரம் 90 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களாக குறைக்கப்படும் என்று புரோஜெக் லிந்தாசான் கோத்தா ஹோல்டிங்ஸ் நிறுபனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமது அஜியான் அப்துல்லா கூறினார்.

மேலும், இந்த நெடுஞ்சாலை திறக்கப்படுவதன் மூலம் பெர்சியாரான் மொக்தார் டஹாரியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை 39 விழுக்காடும் ஜாலான் சுங்கை பூலோவில் 33 விழுக்காடும் பெரிசியாரான சூரியனில் 43 விழுக்காடும் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இது தவிர, இந்த டேஷ் நெடுஞ்சாலை கோத்தா டாமன்சாராவிலுள்ள பெர்சியாரான் சூரியன், சுபாங் விமான நிலையம், டாமன்சாரா பெர்டானா, பெஞ்சாலா மற்றும் கோலாலம்பூர் செல்வதற்கான மாற்று வழியாகவும் விளங்கும் என்று இந்த நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான விளக்கமளிப்பு கூட்டத்தில் அவர் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி, கிள்ளான் பள்ளத்தாக்கின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியை இணைக்கும் தடமாகவும் இந்த நெடுஞ்சாலை விளங்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :