ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளம் மற்றும் தேர்தல் பணிகளை கவனிக்க 1,700 பணியாளர்கள் தயார்- எம்.பி.எஸ்.ஏ. அறிவிப்பு

ஷா ஆலம், அக் 12- ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கும் பதினைந்தாவது பொதுத் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்கும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 1,700 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அந்த 1,700 பணியாளர்களில் 60 விழுக்காட்டினர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் வேளையில் எஞ்சியோர் பொதுத் தேர்தல் பணிகளைக் கவனிப்பர் என்று மாநகர் மன்ற துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.

இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான மாநகர் மன்றத்தின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், குடியிருப்பாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தீயணைப்புத் துறை காவல் துறை ஆகியோருடன் இணைந்து மாதிரி வெள்ளப் பேரிடர் மீட்பு பயிற்சியை மாநகர் மன்றம் வரும் 19 ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் ஏற்படும் போது தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை அறிந்திருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான இந்த பயிற்சியில் 200 பேர் வரை கலந்து கொள்வர் என்றும் அவர் சொன்னார்.

மாநில நிலையிலான இத்தகைய பயிற்சிகள் முற்றுப் பெற்றுள்ள நிலையில் குடியிருப்பாளர் சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய சமூகம் சார்ந்த பயிற்சியை அடுத்து நடத்தவிருக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :