ECONOMYPBT

வெ.58 கோடி மதிப்பிலான பட்ஜெட்- ஷா ஆலம் மாநகர் மன்றம் தாக்கல்

ஷா ஆலம், அக் 12- ஷா ஆலம் மாநகர் மன்ற 57 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தது.

அந்த பட்ஜெட் தொகையில் 43 கோடியே 58 லட்சம் வெள்ளி அல்லது 75.2 விழுக்காடு நிர்வாகச் செலவினங்களுக்கும் 14 கோடியே 35 லட்சம் வெள்ளி அல்லது 24.8 விழுக்காடு மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் என்று மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.

நிர்வாகச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டில் 4 கோடியே 16 லட்சம் வெள்ளி அதிகரித்துள்ளது. நகர, வடிகால், சாலை மற்றும் நிலவடிவமைப்பு ஆகியவற்றை நிர்வாகச் செலவினம் உள்ளடக்கியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, இந்த பட்ஜெட் எதிர்நோக்கக்கூடிய 7 கோடியே 43 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பற்றாக்குறை மாநகர் மன்றத்தின் ரிசர்வ் கையிருப்பிலிருந்து ஈடுசெய்யப்படும் என  அவர் தெளிவுபடுத்தினார்.

நேற்று இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் 2023 ஆம் ஆண்டிற்கான மாநகர் மன்றத்தின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அடுத்தாண்டில் மாநகர் மன்றத்தின் வருமானம் 1.76 கோடி வெள்ளி அதிகரித்து 50 கோடியே 50 லட்சம் வெள்ளியாக உயரும் என குறிப்பிட்ட அவர், இவ்வாண்டின் வருமானம் 48 கோடியே 73 லட்சம் வெள்ளியாகப் பதிவானது என்றார்.

மாநகர் மன்றத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் 67 விழுக்காடு அல்லது 33.84 கோடி வெள்ளி வரி வசூலை மையமாக கொண்டிருக்கும். இது நடப்பு ஆண்டை விட 73 லட்சம்  வெள்ளி கூடுதலாக இருக்கும் என்றார் அவர்.


Pengarang :