ANTARABANGSAPBTSELANGOR

சிலாங்கூரில் 300,000 வீடுகளுக்கு இலவச குடிநீர் விநியோகம்- மந்திரி புசார்

சபாக் பெர்ணம்,  அக் 16-  மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டத்தின் வழி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 20 கன மீட்டர் இலவச குடிநீரைப் பெறுகின்றன என்று  மந்திரி புசார்  கூறினார்.

இந்த டாருல் ஏசான் இலவச குடிநீர்த் திட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த உதவித் திட்டத்தை நாங்கள் அகற்றிவிட்டோம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இத்திட்டத்தை நாங்கள் அகற்றவில்லை உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த சலுகையை வழங்குகிறோம் என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கான வருமான வரம்பு 4,000 ரிங்கிட்டிலிருந்து 5,000 ஆக உயர்த்தப்பட்டது. எனவே தகுதியுடையவர்கள் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்தில்  பதிவு செய்துகொள்ளுங்கள்  என்றார் அவர்.  

சபாக் பெர்ணம் மாவட்ட நிலையிலான சிலாங்கூர் பென்யாயாங் பயணத் திட்டத்தை தொடங்கி வைக்கும்  நிகழ்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.

 சுமார் 100,000 பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு உண்டாகும் 3 கோடி ரிங்கிட் செலவை மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்று அமிருடின் கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது  தெரிவித்திருந்தார்.

சிலாங்கூர்வாசிகள் வரும் 31 டிசம்பர் 2024 வரை இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். மலேசிய குடிமக்களாகவும்  தனிப்பட்ட மீட்டர் கொண்ட  குடியிருப்பு வளாகங்களில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

Pengarang :