Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari menyantuni penerima baucar pada program Jom Shopping Deepavali DUN Sungai Tua di Sri Ternak, Gombak pada 16 Oktober 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தீபாவளி செலவினைக் குறைக்க தீபாவளி பற்றுச் சீட்டுகள் பேருதவி- பொதுமக்கள் பெருமிதம்

கோம்பாக், அக் 16-  வசதி குறைந்தவர்களும் தீபாவளிக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு உதவும் நோக்கில் மாநில அரசு ஜோம் ஷோப்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தீபாவளி செலவுகளைக் குறைப்பதில் இந்த திட்டம் பெரிதும் துணை புரிவதாக இத்திட்டத்தின் வழி பயன்பெற்ற பலர் கூறினர்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக இந்த 100 ரிங்கிட் பற்றுச்சீட்டு திட்டத்தில் தமது பெயரும் இடம் பெறும் என பெரிதும் எதிர்பார்த்ததாக விற்பனை உதவியாளரான திருமதி எம்.ஜெயஸ்வரி (வயது 50) தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டுள்ள என் கணவரால் வேலைக்கு செல்ல இயலாது. பிள்ளைகளும் இன்னும் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், மிகவும் சிக்கனமாக குடும்பத்தை வழி நடத்த வேண்டியுள்ளது என அவர் சொன்னார்.

மூன்றாவது முறையாக இந்த உதவி எனக்கு கிட்டியுள்ளதோடு பொருள்களை வாங்குவதற்கு உண்டாகும் செலவை இதன் மூலம் குறைக்க முடிகிறது. இந்த பணத்தைக் கொண்டு நான் வீட்டுச் சமையல் பொருள்களை வாங்குவேன் என அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள பாசாராயா ஸ்ரீ தெர்னாக் செலாயாங்கில் நடைபெற்ற நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து அவர் பற்றுச்சீட்டினைப் பெற்றுக் கொண்டார்.

இதனிடையே. இந்த 100 ரிங்கிட் பற்றுச்சீட்டு தீபாவளிக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு தமக்கு கிட்டியுள்ளதாக சொந்த தொழில் செய்து வரும் அஜித் சிங் (வயது 50) சொன்னார்.

இது பெரிய தொகையாக  இல்லாவிட்டாலும் எனது குடும்பத்திற்கு இது நிச்சயமாக உதவுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக எனது வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை வழிநடத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

இந்த பற்றுச்சீட்டைக் கொண்டு தீபாவளிக்கு தேவையான பொருள்கள் குறிப்பாக கோழி, முட்டை போன்றவற்றை வாங்குவேன் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :